ஜனாதிபதி பதவி விலகக்கோரி சமத்துவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 09.07.2022 அன்று இடம்பெற்ற மாபெரும் மக்கள் கிளர்ச்சியினை உண்மைக்கு உண்மையாக நேரலையாக செய்தி வழங்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் காட்டுமிராண்டித் தனமாக பாதுகாப்பு தரப்பினரால் திட்டமிட்டு தாக்கப்பட்டமையினை கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சார்பில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். என
இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் செவ்வாய்கிழமை (12) ஊடகங்களுக்கு
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊடகவியராளர் மீது பாதுகாப்பு படையினரால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான இத் தாக்குதல் ஒரு நாட்டின் ஆட்சியாளர்களின் இயலாமையை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் ஊடக சுதந்திரத்தை முழுமையாக மழுங்கடிக்கும் ஒரு செயற்பாடாகவே இது அமைகின்றது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் இன்று நேற்றல்ல. இந்நாட்டில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருவதுடன் திட்டமிட்ட படுகொலைகளும் இடம்பெற்று வருகின்றன.
ஊடகவியலாளர்கள் மீதான காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் படையினரும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களது கடமைகளை அவர்கள் தங்குதடையின்றி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஊடக சுதந்திரத்தை முழுமையாக அமைத்துக்கொடுக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் ஊடகவியாளர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டு போராட்டத்தின் போதான ஊடகவியலாளர்களின் பங்களிப்பை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம். இவ்விடத்தில் ஊடகவியலாளர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். எனவே இத்தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.

0 Comments