தியாகி பொன்.சிவகுமாரனின் 48ஆவது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக் கிழமை 05ம் திகதி மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டது.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள குறிஞ்சானை கிராமத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் குழுவினால் அனுஸ்டிக்கப்ட்டது.
உரும்பிராயில் 1950ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த சிவகுமாரன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியை கற்றார்.
சிவக்குமாரன், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி, கோப்பாயில் பொலிஸார் சுற்றிவளைத்த போது கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி உயிரிழந்தார்.
இவ் அஞ்சலி அனுஷ்டிப்பில் பொன்.சிவகுமாரனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.
அன்னாரின் அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், முன்னணியின் இளைஞர் அணி தலைவர் இ. சத்தியசீலன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை அஞ்சலி நிறைவின்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இதன்போது நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இவ் வாய்த்தர்க்கம் சுமார் 15 நிமிடம் இடம் பெற்றதுடன் இதன்போது இந்நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது யார் எனவும் பொலிஸாரால் ஊடகவியலாளர்களிடம் தனித்தனியே வினாவப்பட்டது.
தொடர்ந்து அவ்விடத்திலிருந்து பொலிஸார் கலைந்து சென்றனர்.




0 Comments