200 வருடங்களாக நாட்டுக்காக உழைத்த மக்களுக்கு காணியுரிமை வழங்காத அரசாங்கங்கள் வெட்கப்பட வேண்டும்


தங்களது கடுமையான உழைப்பின் மூலம் இந்நாட்டை தூக்கி நிறுத்திய மலையக மக்கள் சுமார் 200 வருடங்களாக அடுக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், நவீன உழைப்புச்சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுவதோடு அவர்களுக்கான வாழ்விடத்தை அமைத்துக்கொள்வதற்கும், வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்குமான காணிவுரிமையை இதுவரை வழங்கப்படாமைக்காக இந்தநாடு வெட்கப்படவேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன்  தெரிவித்தார்.

அண்மையில்  ஹட்டனில்  இடம் பெற்ற, மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த"காணி உரிமைக்கான தினத்தில்" கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்


 அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாடு நாட்டு மக்களுக்கு சொந்தமானதென்றால் இந்தநாட்டின் குடிமக்களான மலையக மக்களுக்கும் இந்த நாடுசொந்தமானதாகும் அந்த சொந்த நாட்டில் தான் சுதந்திரமடைந்த அடுத்த கணம் மலையக மக்கள்  "அந்நியராக்கப்பட்டனர்". மீண்டும் இந்நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சுமார் 07 தசாப்தங்கள் போராடாவேண்டியதாயிற்று . ஆனால் இன்றும் எமது மலையக மக்கள் பேப்பர் பிரஜைகளாகவே(பதிவுபிரஜை) இருப்பது கவலைக்குரிய  விடயமாகும்.

 ஆகவே எமது மக்களை பொதுபிரகடனத்தின் மூலம் வம்சாவளி பிரஜைகளாக ஏற்றுக் கொண்டும், எம்மக்களுக்கான காணிவுரிமையை வழங்கியும் இந்த நாடு தனது நன்றிவுணர்வை வெளிப்படுத்தவேண்டும். மலையக மக்கள் இந்த நாட்டை பிரித்து கேட்கவில்லை. இன்னொருவரின் காணியை கபடத்தனமாக கையகப்படுத்த முயற்சிக்கவில்லை. தங்களின் உழைப்பால் வந்த உடமையை உரிமையாக்குமாறே கேட்கின்றனர் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு எந்த அடிப்படையில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றதோ அதே முறைமையின் கீழ் மலையக மக்களுக்கும் காணிகள் உரிமையாக்கப்படவேண்டும்.

 மலையக பட்டாளி வர்க்கம் உழைக்க மட்டும் பிறந்தவர்கள் அல்ல. அவர்கள் வாழவும் பிறந்தவர்கள். மந்தை கூட்டங்கள் அல்ல. போர்க்குணம்மிக்க பாட்டாளி வர்க்கத்தினர். அவர்களின் போராட்ட வலிமையை கடந்த காலத்தில் வராலாற்று நிகழ்வாக பதிவுசெய்துள்ளதை கடந்தகால மலையக மக்களின் போராட்ட நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தால், தெரிந்துக்கொள்ள முடியும்..1936 ம் ஆண்டு உருளவள்ளி தோட்டத்தில் எழுச்சிபெற்ற நிலவுடமைக்கான போராட்டம் 1977 மே11 டெவன் போராட்டத்தில் சிவனும் லெச்சுமணன் என்ற பாட்ட்டாளிவளர்க்க இளைஞனை மண்ணுக்கு உரமாக்கி (பாதுகாப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு பலி) பல்லாயிரக்கணக்கான தேயிலை விளைநிலங்களை பாதுகாத்த வீரமறவர்கள் வாழ்ந்த சமூகம் மலையக தமிழ் சமூகமாகும். பின்நாட்டிகளில் இவர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கைக்காக முதலாளித்துவ ஏகாதிபத்திய பேரினவாத அரசாங்கங்களோடு கைகோர்த்துக் கொண்டு மலையக பட்டாளி வர்க்கத்தின் போர்க்குணங்களை மழுங்கடித்து, பிரித்தாளும் தந்தோரோபாயத்தை பயன்படுத்தி, அவர்களை சலுகைக்கு சோரம் போகும் சமூகமாக மாற்றிவிட்டனர்.

 இந்தநிலையில்1980களில் ஒடுக்கு முறைகளிலிருந்து மீண்டெழ வேண்டுமென்ற சிந்தனை கிளர்ச்சி மலையக படித்த  இளைஞர்களிடையே ஏற்பட்டன. இந்த சிந்தனை கிளர்ச்சி மலையக மண்ணையும், மக்களையும் பாதுகாக்கும் இளைஞர்களின் எழுச்சியாக மாற்றம் பெற்றது. இந்த புதிய மாற்றத்தை மலையக தலைமைகளென்று சொல்லிக் கொண்டவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

 இளைஞர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தார்கள். அவர்களுக்கான வாய்ப்பை வழங்குவதற்கு மறுத்தார்கள். அதேநேரம் இன்னொரு பக்கம் வடகிழக்கில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் எழுச்சிபெற ஆரம்பித்திருந்தது. பல இயக்கங்கள் தோன்றின. அதில் பிரதான 05 இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் அமைப்பு மலயகத்தை இணைத்துக் கொண்டு தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.  அதில் மலையக மக்களின் நிலவுடமை மற்றும் பிரஜாவுரிமை பிரச்சினைக்கான தீர்வை பிரதான கோரிக்கையாக்கியிருந்தது.  இது மலையக தலைமைகளால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களை ஈர்த்திருந்தது.  நூற்றுகணக்கான மலையக இளைஞர்கள் ஈரோஸ் அமைப்போடு இணைத்து கொண்டு மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய, சர்வதேச தளங்களில் பேசுபொருளாக்குவதற்கான பங்களிப்பை செய்திருந்திருந்தனர். அந்தக் குரல் மலையக மக்களின் நிலவுடமைக்காக இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கின்றது.  அதே போல் காணிவுரிமைக்கான போராட்டங்கள் பலதாசப்தங்களாக நடைபெற்று வருகின்றது.  அதில் ஒரு அங்கமாக மலையக மக்களின் காணிவுரிமைக்கான இயக்கத்தின் காத்திரமான பணியும் குறிப்பிட்டு சொல்லக் கூடியதொன்றாகும்.  

ஆகவே 1980களில பின் மலையகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் எவ்வாறு அப்போதைய இளைஞர்கள் தங்களது உணர்வுபூர்வமான பங்களிப்பை செய்தார்களோ அதே போல் மலையக மக்கள் தங்களை நிலவுடமை சமுதாயமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான பயணத்திற்கு இன்றைய இளைஞர்களும் சட்டத்தரணிகளும் பல்கலைகழக மாணவர்களும் சமூக அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் கைகோர்த்துக் கொண்டு உணர்வுபூர்வமாக பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.  மலையக மக்களின் அனைத்து போராட்டங்களிலும் அதை வலுப்படுத்துவதிலும், தீர்வுக்க்கான அழுத்தம் கொடுப்பதிலும் மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய, சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் ஈரோஸ் அமைப்பும், ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றார்.








Post a Comment

0 Comments