ஊடகவியலாளர் நடேசனின் 18 வது ஞாபகார்த்த நிகழ்வும் "ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்" நூல் வெளியீடும்!!


மட்டக்களப்பில் கடந்த 2004 ஆண்டு  துப்பாக்கியால்  சுட்டு கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை  நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் 31.05.2022 திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்
18 ஆவது ஞாபகார்த்த நிகழ்வும் "ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்" எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும்  இன்று 29.05.2022 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர்  தேவஅதிரன் தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றதுடன், குறித்த நிகழ்வின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள்  பிரதம  செய்தி ஆசிரியர் பீ.தேவராஜா மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி நவரெட்ணம் நவாஜி அடிகளாரும் இணைந்து மலர் மாலை அணிவித்து, நினைவுச் சுடரேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இங்கு வருகை தந்த அனைவராலும் சுடர் ஏற்றி  மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், சிவராம் ஞாபகார்த்த மன்றமும் (சுவிஸ்) இணைந்து வெளியிட்ட "ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் இடம்பெற்றது.

நிகழ்வின் வரவேற்புரையை  கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய உபதலைவர் க.ஜெகதீஸ்வரனும், தலைமையுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான, இ.பாக்கியராஜா நிகழ்த்தியதுடன், நூல் வெளியீட்டுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் .தேவஅதிரன் நிகழ்த்தினார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களினால் குறித்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம், வீரகேசரியின் முன்னால் பிரதம ஆசிரியர் பீ.தேவராஜா மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேந்திரன்
ஆகியோரினால் ஊடகர் ஜீ.நடேசன் தொடர்பான சிறப்பு நினைவுப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கட்டுரைத் தொகுப்பு நூலில் நடேசனின் நண்பர்கள், பத்திரிகையாளர்கள், நெருக்கமானவர்கள் எனப் பலரும் தமது நினைவகளைப் பகிர்ந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு 17ஆவது ஞாபகார்த்த தினத்தில் வெளியிடவென உத்தேசிக்கப்பட்டிருந்த போதும் கொவிட் சூழல் காரணமாக குறித்த நூல் வெளியீடானது பிற்போடப்பட்ட நிலையில் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, நடராசா, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா. ஜீவன், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,  
ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அதிகளவிலானோர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு  அஞ்சலி செலுத்தியதுடன், சிறப்பு நூல் பிரதிகளையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.












|












Post a Comment

0 Comments