தற்பொழுது நாட்டில் உருவெடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை இதனால்தான் நாளை 28ம் திகதி தினம் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.
என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா.ருபேஷன் தெரிவித்துள்ளார்
இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து மக்களும் மிக மோசமான பிரச்சினைகள் பலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இது பற்றி பல விடயங்கள் தொடர்பாக கல்வி அமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் 28-04-2022 நாளைய தினம் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அதிபர் ஆசிரியர்களிடம் அழைப்பு விடுக்க நேரிட்டது.
நாட்டில் பல இடங்களிலும் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் ஊழல் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் பதவியில் இருக்க கபட நாடகத்தினை அரங்கேற்றி வருகின்றனர் இந்த நிலையில் தான் சாதாரண மக்களின் போராட்டத்தை சக்தி மிக்கதாக மாற்றி வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல பெரும்பாலான தொழிற்சங்கங்கள் முடிவெடுத்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
அதிபர் ,ஆசிரியர்கள் ஆகிய எமக்கு இன்று பொருளாதார துன்பத்தினால் வாடும் மக்களுக்கு நல்ல நாடொன்றினைப் பெற்றுக்கொடுக்கும் மக்கள் போராட்டத்தை சக்திப் படுத்தி எதிர்கால மற்றும் இன்றைய மாணவர் சமுதாயத்திற்காக உறுதிமிக்க தாய் நாட்டினை ஏற்படுத்திக் கொடுக்கும் பாரிய சமூகப் பொறுப்பும் உள்ளது. எனவேதான், கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்து நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தீர்மானித்தோம்.
பிறந்த, பிறக்க இருக்கும் மக்களுக்காக இந்த ஊழல் ஆட்சியாளர்களை நாட்டிலிருந்து துடைத்தெறிய ஆசிரியர்களாகிய நாமும் அனைத்து மக்களுடனும் இணைந்து தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்போம் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா.ருபேஷன் தெரிவித்தார்.

0 Comments