ஏறாவூரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பில்...


தற்போது சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து  அனைவரது விசனங்களையும் பெற்றுச் செல்லும் விடயமாக காணப்படுவது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இரண்டு சகோதர இளைஞர்களை மிலேச்சத்தனமாக தாக்குகின்ற சம்பவமாகும்... 


இது தொடர்பான ஆரம்ப கட்ட தகவல்களின் படி நேற்று (22) மாலை  6.30மணியளவில் ஏறாவூர் பிரதான வீதியில் அல் முனீரா வித்தியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஸ்த்தலத்திற்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது விபத்து தொடர்பான துல்லியமான தகவல்களை பெறுவதற்காக வீதியின் இரு மருங்கிலும் அளவு நாடாவினைக் கொண்டு அளக்க முற்பட்ட தருணம் வீதியால் வந்த வாகனங்களை நிறுத்தி உள்ளனர் , இந்நேரம் இருளடைந்திருந்தமையாலோ அல்லது தங்களது கவனஈனத்தாலோ ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பை சேர்ந்த திலீபன் மற்றும் தாசன் என பெயர் குறிப்பிடப்படும் (ஆரம்ப தகவல்களது அடிப்படையில்) இளைஞர்கள் இந்த சமிக்ஞையை மீறி தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர் . 

பொலிசாரது அறிவுறுத்தலை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் வீதியின் இரு மருங்கிலும் நின்ற பொலிஸாரின் கையில் இருந்த அளவுநாடா இழுபட்டுச் செல்ல தொடங்கியதும் விபரீதத்தை உணர்ந்த இருவரும் பொலிசாரது அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து பயணித்து ஏறாவூர் காதியார் வீதியினூடாக வாவிக்கரை வீதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்.


இவ்வேளை அவ்விடத்தில் நின்ற பொதுமகன் ஒருவரது சைக்கிளில் ஏறி  அவர்களை  பின்தொடர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலமுறை சைகைகளை வெளிப்படுத்திய போதும் அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அஹமட் பரீட் மைதானத்திற்கு அருகில் வைத்து அவர்களை பிடித்து  தாக்குதல் நடாத்தியதாக சம்பவ இடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்போது அங்கிருந்த பொதுமக்களால் குறித்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் தற்போது பேசு பொருளாகி இருக்கின்றது..


உண்மையில் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களும் சர்ச்சைகளும் பேசு பொருளாகி இருக்கின்ற இந்த நேரத்தில் சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் பெரும் களங்கத்தையே பொலீஸாருக்கு உருவாக்கி நிற்கிறது- மிலேச்சத்தனமாக தாக்குதல் நடாத்துகின்ற உரிமை பொலிஸாருக்கு கிடையாது எனவும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளையே அவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும்,  தாக்குதலை மேற்கொண்டவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தொனியில் அரசியல் பிரதிநிதிகள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை குரல் எழுப்புகின்றனர்.


குறித்த விடயம் தொடர்பில் தற்போது துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


பொலிஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எவ்வேளையிலும் இவ்வாறான தாக்குதல்கள் ஏற்க முடியாது அதிலும் போக்குவரத்து சார் பிரச்சனைக்காக இவ்வாறு மிலேச்சத்தனமாக தாக்குவது என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றுமாகும்..


-அஸ்மி-



Post a Comment

0 Comments