(எஸ்.சதீஸ் )
மாணவர்களைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இன்றி, பரீட்சைக்கு தயாராவதற்கான சூழலை ஏற்படுத்தாது வருகின்ற நவம்பரில் பரிட்சைகளை நடத்த முடிவு செய்துள்ள விடயத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் எந்த வகையிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவதை விரும்பமாட்டோம்.
என வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் செயலாளர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஆசிரியரின் இல்லெ மொன்றில் வெள்ளிக்கிழமை (17.09.2021ம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார் இந்த பேச்சுவார்த்தையானது கடந்த ஆகஸ்ட், 31ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவினை தெளிவுபடுத்துவதற்காகவே அழைத்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு பற்றி எந்த ஒரு ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
இருந்தபோதிலும் சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கல்வியமைச்சின் செயலாளர் உறுதி வழங்கியிருந்தார்.
எனினும் வருகின்ற நவம்பர் மாதத்தில் நடைபெறுகின்ற கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் நடக்க இருப்பது உங்களுக்கு தெரியும் ஆனால் நிகழ்நிலை கல்வியை நாட்டில் 40 சதவீதமான மாணவர்கள் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆசிரியர் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இந்த 40 சதவீதமான மாணவர்கள் தொடர்ந்தும் நிகழ்நிலை கல்வியை ஏதோ ஒரு வகையில் பெற்றுக் கொண்டு வந்திருந்தார்கள். இந்தக் நிலையில் மாணவர்களைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இன்றி பரீட்சைக்கு தயாராவதற்கான சூழலை ஏற்படுத்தாது அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்வைக்காது வருகின்ற நவம்பரில் பரிட்சைகளை நடத்த முடிவு செய்துள்ளது. நாம் ஒருபோதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதை விரும்பமாட்டோம். எனவே மாணவர்களுக்கு பரிட்சை எழுதுவதற்கான சரியான சூழலை ஏற்படுத்திய பின்னரே பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை கோரிக்கையாக வைக்கின்றோம்.
அத்தோடு 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை ஆரம்பிப்பதாக கூறுகின்ற கல்வியமைச்சு மாணவர்களை பாடசாலைக்கு அழைகின்ற பொழுது எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்கின்ற ஒரு திட்டத்தையோ , நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை கற்றல் சூழலுக்கேற்ற வகையில் மாற்றுவதற்கான எந்த ஒரு திட்டத்தையும் முன் வைக்காமல் இவ்விடயங்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆசிரியர்களில் பலருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விரைவாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 200 வீடுகள் அமைகின்ற செயற்பாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு இந்த பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மாணவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அதற்குரிய வழிமுறைகளை விரைவாக செயற்படுத்தி பாடசாலைகளை ஆரம்பிக்க முன் வரவேண்டும். என்கின்ற கோரிக்கையையும் அரசுக்கு நாங்கள் முன் வைக்கின்றோம். என தெரிவித்தார்

0 Comments