வவுணதீவு பொலிஸாரால் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 06 பரல் கோடா 70 லீற்றர் கசிப்பு- மீட்பு

வவுணதீவு பொலிஸாரால் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 06 பரல் கோடா 70 லீற்றர் கசிப்பு-  மீட்பு  - கோடா  கழிவு குளத்தில் விடுவதால் உயிரினங்கள் பாதிப்பு


(வவுணதீவு நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைகாலத்தில் இந்த கசிப்பு உற்பத்தி பல  கிராமங்களிலும் வேரூன்றி உள்ளதனை கிராம மக்கள் வாயிலாகவும் பொலிஸார் ஊடாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளத்தை அண்டிய காட்டுப் பகுதியில் மிகவும் மறைமுகமான இடத்தை தெரிவுசெய்து கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்ட்டு கசிப்பை தயாரிக்கும்போது,   திங்கட்கிமை (30) பிற்பகல் இடம்பெற்று முற்றுகையில்   கோடா அடங்கிய ஆறு பரல்கள், 70 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் சில பொருட்களும்  வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்கவின் ஆலோசனையில், வவுணதீவு பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக, நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமியின் விழிகாட்டலில், சி.லோஜிதன் (8626), ஜயசுந்தர (91132), வை. டினேஸ் (8656) ஆகியோர் அடங்கிய பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினரால்  இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதேவேளை கண்டியனாறு குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிலில் இளைஞர் ஒருவர் உள்ளூர் தயாரிப்பான கட்டுத் துப்பாக்கியுடனும் கசிப்பு 3750 மில்லி லீற்றருடனும் இதே தினத்தில் மேற்படி விஷேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.


கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளத்தோரங்களிலுள்ள காட்டுப் பகுதியில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மிக அதிகரித்துள்ளதாகவும், விஷேட அனுமதியுடன் வவுணதீவ் பொலிஸாரால் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்துவருவதாகவும் பொலிஸ்  பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

அத்துடன் வடிசாராயம் எனப்படும் இந்த கசிப்பு உற்பத்தியை மேற்கொண்டவுடன் அதன் கழிவுகள், கோடா போன்றவற்றை அருகிலுள்ள குளத்தில் போட்டுவிடுவதால் குளம் மாசடைவதாகவும், அதிலுள்ள உயிரினங்கள் அழிக்கப்படுவதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பரல்கள் உள்ளிட்ட பொருட்களையும், கட்டுத் துப்பாக்கி, கசிப்புடன் கைது செய்யப்பட்ட  நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.








Post a Comment

0 Comments