எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலானது, இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளாகியிருந்தாலும், அதிலிருந்து வெளியாகியுள்ள இரசாயனங்கள் மற்றும் பொலித்தீன் உள்ளிட்டவை இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் கடற்பரப்புக்களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது. தீ முற்றாக பரவ முன்னர் அதனை அணைப்பதற்கோ அல்லது வேறு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க தவறிய அரசாங்கம் இறுதியில் கப்பலை ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்ல தீர்மானித்தது.
ஆரம்பத்திலேயே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டிய அரசாங்கம் இறுதி கட்டத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை காலத்திற்கு பொருந்தாத தீர்மானம் என்று விசனம் வெளியிடும் சூழலியலாளர்கள் , கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்துச் சென்று ஏனைய கடற்பரப்புக்களும் ஆபத்தை தோற்றுவிப்பதா இதன் எதிர்பார்ப்பு என்றும் கேள்வியெழுப்புகின்றனர்.
கடற்சூழல், மீனினங்கள் உள்ளிட்ட பல்வகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகள் என அனைத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கப்பல் தீ விபத்து எதிர்காலத்தில் மனிதர்களையும் அபாயத்திற்கு உள்ளாகக் கூடும் என்றும் அவர் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் தீக்கிரையாகியுள்ள பேர்ள் கப்பல் எவ்வாறு ஏனைய நாடுகளில் கடற்பரப்புக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது குறித்தும், கப்பல் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் சூழலியலாளர் துசான் கப்புறுகொட இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.
சர்வதேச கடற்பரப்புக்களுக்கும் அச்சுறுத்தல்
பேர்ள் கப்பல் தீ விபத்து இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ள போதிலும் , கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் ஏனைய இரசாயனங்கள் இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளின் கடற்பரப்பிற்கும் செல்லக் கூடிய அபாயம் காணப்படுகிறது. ஏனைய நாடுகளின் கடற்பரப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என்று நூற்றுக்கு நூறு வீதம் உறுதியாகக் கூற முடியாது. காரணம் பெருமளவான பொருட்கள் தற்போது கடலில் கலந்துள்ளன. காற்று மற்றும் கடல் அலையூடாக இவை அந்நாட்டு கடற்பரப்பிற்குச் செல்லக் கூடும். எனவே இந்த தீ விபத்து சர்வதே கடற்பரப்புக்களுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.
கப்பலிலுள்ள கொள்கலன்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
இவை தவிர கடலில் விழுந்துள்ள கொள்கலன்களின் இன்னும் அதிகளவிலான பிளாஸ்டிக் துணிக்கைகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அவ்வாறான பொருட்கள் கடலில் கலப்பதற்கு முன்னர் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பது தெரியாது.
கப்பலை கரையை நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும்
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் கப்பலை கரையை நோக்கி நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் கப்பலை ஆழ் கடல் நோக்கி நகர்த்துவதற்காக நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. இதன் ஊடாக கப்பலிலிருந்த பொருட்கள் கடலில் கலப்பதை தவிர்ப்பதற்கு பதிலாக அதனை ஆழ்கடல் பகுதியில் சேர்ப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இறுதியில் கப்பலை ஆழ்கடல் நோக்கி நகர்த்தும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
மீட்க்கப்படாத கொள்கலன்களால் பாரிய ஆபத்து
கப்பல் முழுமையாக கடலில் மூழ்கும் பட்சத்தில் அதிலுள்ள இரும்பு கொள்கலன்கள் உப்பு நீரினால் அரிக்கப்பட்டு துருப்பிடித்து உடையும் நிலை ஏற்படும். அவ்வாறு கடலுக்குள் கொள்கலன்கள் உடையும் பட்சத்தில் அதிலுள்ள பொருட்கள் மீண்டும் கடலில் கலப்பதால் அது மீண்டும் எமது கடற்சூழலுக்கு பாரிய பாதகத்தையே ஏற்படுத்தும்.
ஆழ் கடல் நோக்கி கப்பலை நகர்த்துவது பொருத்தமல்ல
எவ்வாறிருப்பினும் நாட்டுக்கு மிக அருகில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தால் பாரியளவிலான பாதிப்புக்களும் எமது நாட்டுக்கு மாத்திரமே ஏற்பட்டிருக்கும். மாறாக ஆழ் கடல்நோக்கி நகர்த்தி கப்பலை அங்கு கைவிட்டால், அதனால் பல நாடுகளின் கடற் சூழலும் பாதிக்கப்படும்.
எனவே எஞ்சியுள்ள கொள்கலன்களை கப்பலுக்குரிய நிறுவனத்திடமிருந்து கப்பலை வரவழைத்து மீள அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பது மிகப் பொருத்தமான தீர்மானமாக அமையும்.
சர்வதேச கடற் சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஏற்ப செயற்படுங்கள்
அவ்வாறில்லை எனில் கொள்கலன்களை கடலிலிருந்து அப்புறப்படுத்தி அவற்றில் உபயோகிக்க கூடிய பொருட்களை பாவனைக்காவது பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதற்கான சர்வதேச கடற்சூழல் பாதுகாப்புசட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்களுக்கமைய எம்மால் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் இதுவரையில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களுக்கமைய ஆழ் கடல் நோக்கி கப்பலை நகர்த்துவதோ அல்லது எஞ்சியுள்ள கொள்கலன்களை மீட்காமலிருப்பதோ எதிர்வரும் காலங்களில் கடற்சூழலுக்கும் , கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கே பாதகமான விளைவை ஏற்படுத்தும். எனவே உயர்மட்ட அதிகாரிகள் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப பொருத்தமான தீர்மானங்களை எடுப்பதே உச்சிதமானது.

0 Comments